என்.எஸ்.மாதவனின் புகழ் பெற்ற மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியாகள்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ‘பீரங்கிப் பாடல்கள்’ (இரா.முருகன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கியது) நூலில் இருந்து –
பள்ளிவாசல் அணைக்கட்டில் இருந்து கிழக்கு மேற்காகக் கடந்து மின்சாரம் வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாக, லந்தன்பத்தேரியில் முதல் ரேடியோ வந்தது. மலாக்கா ஹவுஸ் கீழ்த் தளத்தில் சாயாக்கடை நடத்திய பவுலோஸ், வெண்டுருத்தியில் இருந்து உத்தியோக இட மாற்றம் கிடைத்துப்போன ஒரு பஞ்சாபி கடற்படைக்காரனிடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பழைய ரேடியோவைக் கொண்டு வந்த தினத்தில், மலாக்கா ஹவுஸின் மேல் கூரையில் இரண்டு மூங்கில் கழிகள் நிறுத்தப்பட்டன. அவற்றில், வலைவலையாக இருந்த பிரகாசமான செப்பு ஏரியலை பவுலோஸும் அவருடைய ஆட்களும் நீட்டி இழுத்துக் கட்டினார்கள். தரையில் குழி தோண்டி, மரத்தை எரித்த கரி நிரப்பி, எர்த் அமைக்கப்பட்டது. காகிதத் தோரணங்கள் கட்டிய பவுலோஸின் சாயாக்கடையிலும், மலாக்கா ஹவுஸின் நீண்ட வராந்தாவிலும் விருந்தாளிகள் ரேடியோ பாடுவதற்காகக் காத்திருந்தார்கள். அப்பனுடைய கையைப் பிடித்துக் கொண்டு நானும் அங்கே நின்றிருந்தேன்.
பிலாத்தோஸ் பாதிரியார் வந்ததும் ரேடியோவை ஆசீர்வதித்தார்: “அக்னி ஜ்வாலை கொண்டும், மேகங்களைக் கொண்டும், தீர்க்கதரிசிகளைக் கொண்டும் எம்மோடு பேசிய பரமபிதாவே, உம்முடைய திருவசனத்தை எடுத்துச் சொல்லவும், மனுஷருக்குள்ளே பிரியத்தை வளர்த்தெடுக்கவும், சகலரின் இருதயத்திலும் சந்தோஷத்தை உண்டாகவும், லந்தன்பத்தேரியில் முதலாவதும், பிலிப்ஸ் கம்பேனியாரால் ஹாலந்தில் செய்யப்பட்டதும், உம்முடைய ஊழியக்காரனான பவுலோஸ் பவுலோஸின் பெயரில் லைசன்ஸ் உள்ளதுமான இந்த ரேடியோவை ஆசிர்வதியும். கர்த்தரான கிறிஸ்து மூலம் இந்தப் பிரார்த்தனையை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். ஆமென்”.
ஆசிர்வதிப்பு முடிந்ததும் இரண்டு மூங்கில் கூடைகளில் பப்பட வடையும் பழப்பொறியும் எடுத்து வந்து அங்கே கூடியிருந்தவர்களுக்கு விநியோகிக்கப் பட்டது. கில்பர்ட்டும், லந்தன் அரண்மனையில் காவல் காரரான முகம்மதுவும், பிலாத்தோஸ் பாதிரியாரும் ரேடியோவைச் சுற்றி நின்றிருந்தார்கள். கில்பர்ட் ரேடியோவின் குமிழை வேகமாகத் திருப்ப, ஏதேதோ சத்தங்கள் கேட்டன. திடீரென்று கொரகொரவென்று சத்தம். கில்பர்ட் சொன்னார் : “ இதுதான் திருச்சூர் ரேடியோ ஸ்டேஷன். இன்னும் ஒலிபரப்பு ஆரம்பிக்கலே. தொடங்கும்போது கேட்டா, பிகில் ஊதற சத்தம் பிரமாதமா இருக்கும்”.
“கில்பர்ட்சேட்டா, ஷார்ட் வேவ் வருதா பாருங்க”, ஜப் தில் பீட்டர் நறொஞ்ஞா சொன்னார்.
ஆகாயவெளியில் இருந்து வரும் ஒலிகளைச் சிற்றலையில் கேட்க நாங்கள் காதுகளைக் கூர்மையாக்கிக் காத்திருந்தோம். வெடிக்கும் மின்சாரக் குமிழ்களின் ஒலியும் சூறைக் காற்று ஊஊவென்று ஊளையிடும் ஒலியும் கேட்டது. திடீரென்று ஒரு குரல். வானத்தில் இருந்து ஏசு கிறிஸ்து மலையாளத்தில் பேசும் குரல் அது. உச்சரிப்பு தமிழ் வாடையோடு இருந்தது.
“புதிய வேதாகமம் மத்தேயு பத்தாம் அத்தியாயம், முப்பத்திநாலு தொடங்கி முப்பத்தாறு வரையான திருவசனம் கர்த்தராகிய ஏசு கிறிஸ்து மொழிவதை நீங்கள் கேட்டீர்கள். இலவச பைபிள் பாடங்களுக்கு எழுத வேண்டிய முகவரி : பைபிள் செண்டர், கேர் ஆஃப் ரேடியோ சிலோன். தபால் பெட்டி ஒன்று ஒன்று ஆறு ஆறு . மந்தவெளிப்பாக்கம். மதராஸ்”.
பிறகு, லந்தன்பத்தேரியில் பலரும் ரேடியோ வாங்கினார்கள். தெற்குப்புற வீட்டு சந்தியாகுவும், சேவியரும், ஓணத் திருநாள் நேரத்தில் ஒரு மர்ஃபி ரேடியோவை அப்பனும் வாங்கினார்கள். குந்தன் மியூசிக் கிளப்பில் தினம் காலை எட்டு மணிக்குக் கொஞ்சம் முன்பு கில்பர்ட் ரேடியோ வைப்பார். அப்போது ரேடியோ சிலோனில் ஒன்றோ இரண்டோ சைகல் கானங்கள் கேட்கக் கிடைக்கும். ஜனநாயக இளைஞர் சங்கத்துக்காரர்களும் ரேடியோ வாங்கினார்கள். தினம் மாலை ஐந்து மணிக்கு ரேடியோ மாஸ்கோவில் அவர்கள் மலையாளச் செய்தி அறிக்கை கேட்டார்கள்.
ரேடியோ வந்தபிறகு புதன்கிழமை இரவுகளில் லந்தன்பத்தேரி நிசப்தமானது. ரேடியோ இல்லாதவர்கள், இருப்பவர்களுடைய வீடுகளுக்கு ரேடியோ கேட்கப் போனார்கள். சரியாக எட்டு மணிக்கு ரேடியோ சிலோனில் அமீர் சயானியின் குரல் கேட்கத் தொடங்கும் : “பாயியோ(ம்) அவுர் பஹ்னோ(ம்)”. தொடர்ந்து பினாகா கீத் மாலா நிகழ்ச்சியில் புதுப் பாடகர்களின் இசை கேட்கும். 1953-ல் ‘பெய்ஜு பவ்ரா’ படத்தில் ‘தும் கங்கா கி மவுஜ்’ பாட்டு மூலம் முகம்மது ரஃபி ஒன்றாம் இடத்தில் இருந்தார். 1955-ல், முகேஷ் ராஜ்கபூருக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். 1955-ல், ராஜ்கபூரின் ‘ஸ்ரீ 420’ படத்தில் சங்கர் – ஜெய்கிஷன் இசையமைப்பில் அவர் பாடிய ‘மேரா ஜூத்தா ஹை ஜப்பானி’ என்ற பாடல் பினாகா கீத் மாலாவில் ஒன்றாம் இடத்தைப் பிடித்தது. நான் பினாகா கீத் மாலா கேட்க ஆரம்பித்தபோது ஒன்றாம் இடத்துக்கு இன்னொரு புதுப் பாடகரான ஹேமந்த் குமார் சாட்டர்ஜி அவருடைய பாடலான ‘ ஹய் அப்னா தில் தொ ஆவாரா’ மூலம் வந்தார்.